சிக்கமகளூருவில் உள்ள அரசு பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா

சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மேலும் 25 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-03 22:07 GMT
சிக்கமகளூரு: சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மேலும் 25 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவிக்கு கொரோனா

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கி தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் பீதியில் இருந்து வருகின்றனர்.
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனால் அந்த மாணவி, பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள். அதைதொடர்ந்து அந்த அரசு பள்ளியில் படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் 25 மாணவிகள் பாதிப்பு

தற்போது அந்த மாணவிகளின் மருத்துவ அறிக்கை வந்துள்ளது. அதில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள், சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் சிருங்கேரி உண்டு உறைவிட விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவிகள் 3 பேரும் வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கலெக்டர் எச்சரிக்கை

இதைதொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம்  தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்