ஒடிசாவில் சபாநாயகரை நோக்கி காலணிகள் வீச்சு; 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு
ஒடிசா சட்டசபையில் சபாநாயகரை நோக்கி காலணிகள், மைக்ரோபோன்களை வீசிய 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
புவனேஸ்வர்,
ஒடிசா சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பின்பு, சுரங்க ஊழல் பற்றி காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ஒத்தி வைப்பு தீர்மானம் மற்றும் உறுப்பினர்களின் விவாதம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் சூர்ய நாராயண் பேட்ரோ அனுமதி மறுத்து விட்டார். சில மசோதாக்களும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன.
இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான ஜெயநாராயண் மிஸ்ரா, பிஷ்னு பிரசாத் சேதி மற்றும் மோகன் மஜ்ஜி ஆகியோர் சபாநாயகரை நோக்கி காலணிகள், மைக்ரோபோன்கள் மற்றும் காகிதங்கள் உள்ளிட்ட பிற பொருட்களை வீசி எறிந்தனர் என கூறப்படுகிறது.
இதனால், அவர்கள் 3 பேரையும் மீதமுள்ள கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல் சஸ்பெண்டு செய்யும்படி காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பின் வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்களை சபாநாயகர் பேட்ரோ ஆய்வு செய்துள்ளார். அதன்பின் 3 எம்.எல்.ஏ.க்களையும் அவர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதன்பின் காலவரையின்றி அவை ஒத்தி வைக்கப்பட்டது.