முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சந்திப்பு; குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் எச்.கே.பாட்டீல் சந்தித்து பேசினார். அப்போது 3 கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தினார்.

Update: 2021-04-03 20:02 GMT

முதல்-மந்திரியுடன் சந்திப்பு

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில் கூட்டணி அரசில் நிலவும் குழப்பம் குறித்து நேற்று முன்தினம் மராட்டிய மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் எச்.கே. பாட்டீல், மாநில காங்கிரஸ் மந்திரிகளுடன் மும்பையில் ஆலோசனை நடத்தினார். அப்போது தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீதான மாமூல் விவகாரம், 3 கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று எச்.கே. பாட்டீல் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே, அந்த கட்சி மந்திரிகள் அசோக் சவான், பாலசாகேப் தோரட் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

இந்த சந்திப்பின்போது, 3 கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் அரசு அமைந்ததாகவும், அதனை தீவிரமாக செயல்படுத்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் முதல்-மந்திரியை வலியுறுத்தினர்.

மேலும் குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் பழங்குடியினர் நலனை காக்க போதிய நடவடிக்கை எடுக்க கோரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கேரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதம் பற்றியும் நினைவுப்படுத்தினர்.

பின்னர் இதுகுறித்து மந்திரி பாலசாகேப் தோரட் நிருபர்களிடம் கூறுகையில், "எங்களது மேலிட தலைவர் எச்.கே. பாட்டீல் முதல் முறையாக முதல்-மந்திரியை சந்தித்து உள்ளார். ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு சமூகமாக அமைந்தது" என்றார்.

மேலும் செய்திகள்