பெங்களூருவில் போலி போலீஸ் கும்பல் கைது

போலீஸ்காரர்கள் எனக்கூறிக் கொண்டு வியாபாரிகளிடம் கொள்ளையடித்து வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கார், பணம், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-02 21:43 GMT
பெங்களூரு: போலீஸ்காரர்கள் எனக்கூறிக் கொண்டு வியாபாரிகளிடம் கொள்ளையடித்து வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கார், பணம், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வியாபாரியிடம் கொள்ளை

பெங்களூரு ராமமூர்த்திநகர் அருகே லக்கரே மெயின் ரோட்டில் புத்தக கடை நடத்தி வருபவர் நிகால்சிங். கடந்த மாதம்(மார்ச்) 31-ந் தேதி இவரது கடைக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் சிலர் வந்தனர். அவர்கள், நிகால்சிங்கிடம் தாங்கள் போலீஸ்காரர்கள் எனக்கூறினார்கள். மேலும் இந்த கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும் என்றும் அந்த நபர்கள் கூறினார்கள்.

பின்னர் ரூ.3 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவோம், இல்லையெனில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கூறி கைது செய்து விடுவோம் என்று நிகால்சிங்கை அந்த நபர்கள் மிரட்டி இருந்தனர். ஆனால் அவர் ரூ.3 லட்சம் கொடுக்க மறுத்து விட்டதால், நிகால்சிங்கை தாக்கிவிட்டு, கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.

8 போலி போலீஸ்காரர்கள் கைது

இந்த நிலையில், கே.ஆர்.புரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நிகால்சிங்கின் கடையில் கொள்ளையடித்த 8 போலி போலீஸ்காரர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் கே.ஆர்.புரத்தை சேர்ந்த அப்ரோஜ் கான்(வயது 29), ரோகித்(20), சாதிக்(19), மன்சூர்(19), குமார்(25), சேக் சுல்தான்(29), ருத்ரேஷ்(29), முகமது அலி(39) என்று தெரிந்தது. இவர்கள் 8 பேரும் நிகால்சிங் உள்பட பல்வேறு வியாபாரிகளிடம் தங்களை போலீஸ்காரர்கள் எனக்கூறி பணம், பொருட்களை மிரட்டி கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதற்காக போலீஸ்காரர்கள் போன்று போலி அடையாள அட்டைகளை, தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், பணம், 9 செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள், போலீஸ்காரர்களுக்கான போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 8 பேர் மீதும் கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்