சமூக விரோதிகளுக்கு போலீசார் சிம்மசொப்பனமாக திகழ வேண்டும்; முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
சமூக விரோதிகளுக்கு போலீசார் சிம்மசொப்பனமாக திகழ வேண்டும் என்று முதல்மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு: சமூக விரோதிகளுக்கு போலீசார் சிம்மசொப்பனமாக திகழ வேண்டும் என்று முதல்மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 ஆயிரம் வீடுகள்
கர்நாடக போலீஸ் துறை சார்பில் போலீஸ் கொடி நாள் மற்றும் முதல்மந்திரியின் பதக்கம் வழங்கும் விழா பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு முதல்-மந்திாி பதக்கம் வழங்கி பேசியதாவது:-
கர்நாடகம் கடந்த 1½ ஆண்டாக அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றன. அதை போலீசார் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினர். சமூக விரோதிகளுக்கு போலீசார் சிம்மசொப்பனமாக திகழ வேண்டும். போலீசாருக்காக 10 ஆயிரம் வீடுகள் ரூ.2 ஆயிரம் கோடியில் கட்டப்படுகின்றன. போலீசார் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றங்களை தடுப்பது போன்ற பணிகளில் ஓய்வு இல்லாமல் உழைக்கிறார்கள். பண்டிகை நாட்களில் கூட அவர்கள் தங்களின் கடமையை ஆற்றுகிறார்கள்.
நலப்பணிகள்
நாட்டிலேயே சிறந்த போலீஸ் படையை கொண்டுள்ள மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 100 போலீஸ் நிலையங்களுக்கு ரூ.200 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. போலீசார் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற போலீசாரின் நலப்பணிகளுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.667 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றங்கள் நிகழும் தன்மைக்கு ஏற்ப போலீசார் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். போலீஸ் துறையை நவீனமாக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. சிறப்பாக பணியாற்றி முதல்மந்திரி பதக்கம் பெற்ற போலீசாரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இந்த விழாவில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் துறை கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், மாநில போலீஸ் டி.ஜி.பி.பிரவீன்சூட் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.