எடியூரப்பா மீது கவர்னரிடம் புகார் அளித்த விவகாரம்: மந்திரி ஈசுவரப்பாவை நீக்காமல் இருப்பது ஏன்? முதல்-மந்திரிக்கு டி.கே.சிவக்குமார் கேள்வி
கவர்னரிடம் புகார் அளித்த விவகாரத்தில் மந்திரி ஈசுவரப்பவை முதல்-மந்திரி எடியூரப்பா நீக்காமல் இருப்பது ஏன் என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா கவர்னருக்கு பல்வேறு சட்ட பிரிவுகளை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். அவர் இன்று (அதாவது நேற்று), நான் எடியூரப்பாவுக்கு எதிராக செயல்படவில்லை. விசுவாசமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
அவரை மந்திரி ஆக்கியது எடியூரப்பா. பதவிப்பிரமாணம் செய்து வைத்தது கவர்னர். அவர் மந்திரியாக எடியூரப்பாவுக்கு தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் எடியூரப்பாவுக்கு எதிராகவே கடிதம் எழுதியுள்ளார். அப்படி என்றால் ஈசுவரப்பா யாருக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதை கூற வேண்டும். ஈசுவரப்பா அவரது கட்சிக்கு விசுவாசமாக இருக்கலாம். எடியூரப்பாவுக்கு அவர் விசுவாசமாக இல்லை.
இந்த விவகாரத்தில் ஆட்சி நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டது. தனக்கு எதிராக கடிதம் எழுதிய ஈசுவரப்பாவை இதுவரை மந்திரிசபையில் இருந்து நீக்காமல் இருப்பது ஏன்?. ஒருவேளை ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் நீடிக்க அனுமதித்தால், எடியூரப்பா தனது தவறை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஈசுவரப்பா கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் நான் அதைப்பற்றி பேசி இருக்க மாட்டேன்.
ஒருவேளை எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜனதா இருந்திருந்தால் இதுபற்றி அவர்கள் பேசாமல் அமைதியாக இருந்து இருப்பார்களா?. கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசு சில வழிகாட்டுதலை வெளியிடுவதாக கூறியுள்ளது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
நாளை (அதாவது இன்று) நான் கேரளாவில் பிரசாரம் செய்ய உள்ளேன். அதன் பிறகு கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பிரசாரத்தை தொடங்குவேன். ஆபாச சி.டி. விவகாரத்தில் நடைபெற்றதாக கூறப்படும் பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவர் தனக்கு பா.ஜனதாவினர் பணம் கொடுக்க முன்வந்தது குறித்து குற்றம்சாட்டினார். அதுபற்றியும் அமலாக்கத்துறையினர் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.