சீனா தரப்புடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை: மத்திய வெளியுறவுத் துறை
கிழக்கு லடாக்கின் இதர பகுதிகளில் இருந்தும், ராணுவ வீரர்கள் விரைவில், 'வாபஸ்' பெறப்படவேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.
பீஜிங்,
கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல், உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இருதரப்பும் அங்கே படைகளை குவித்ததால் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நீடித்து வந்தது.
ஆனால் இருதரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக அங்கே சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வந்த பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து இரண்டு நாட்டு ராணுவங்களும் சமீபத்தில் தங்கள் படைகளை விலக்கிக்கொண்டன.
இதனால் இந்தியா-சீனா இடையேயான பதற்றம் தணியத்தொடங்கி இருக்கிறது. அதேநேரம் இருநாட்டு அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் பல இடங்களில் படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:
கிழக்கு லடாக்கின் இதர பகுதிகளில் இருந்து, இருதரப்பு ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது குறித்து, சீனா தரப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இதில் ஒருமித்த முடிவை எட்டுவதற்கான முயற்சியில், இருதரப்பு ராணுவம் மற்றும் தூதரக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து ராணுவ வீரர்களை விரைவில் திரும்பப் பெறப்படவேண்டும். அந்த பணிகளை விரைவில் நிறைவு செய்ய சீன தரப்பு எங்களுடன் இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.