நந்திகிராமில் மம்தா வெற்றிபெறுவார்; மேற்குவங்காளத்தில் மீண்டும் ஆட்சியமைப்போம் - பிரதமர் மோடிக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

நந்திகிராமில் மம்தா வெற்றிபெறுவார்; மேற்குவங்காளத்தில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-02 04:41 GMT
கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல்  6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மம்தாவை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். 

இதற்கிடையில், மேற்குவங்காளத்தின் தெற்கு 24 பர்கனஸ் மாவட்டம் ஜோய்நகரில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்துவிடுவோம் என்று தெரியவந்ததால் நீங்கள் வேறு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவருகிறதே அந்த தகவல் உண்மை தானா? என்று மம்தா பானர்ஜிக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி எழுப்பிய கேள்விக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில், மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வெற்றிபெறுவார். அவர் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை. இது பாஜகவின் மோசமான சூழ்ச்சி வேலை. நந்திகிராம் தொகுதியில் மம்தாவும், மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம்’ என்றார்.

மேலும் செய்திகள்