மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்கவேண்டும் - மிசோரம் முதல்மந்திரி பேச்சு
மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்கவேண்டும் என்று மிசோரம் முதல்மந்திரி தெரிவித்தார்.
அய்சால்,
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 500 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராணுவ ஆட்சி அடக்குமுறைகளுக்கு பயந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள மியான்மர் மக்கள் பலரும் இந்தியாவுக்குள் அகதிகளாக சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். அவ்வாறு இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மியான்மர் நாட்டு மக்களை தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மியான்மரில் இருந்து வரும் அகதிகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்கவேண்டும் மிசோரம் மாநில முதல்மந்திரி சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சோரம்தங்கா கூறியதாவது, மியான்மர் மக்கள் விவகாரத்தில் இந்திய அரசு மிகுந்த திறந்தமனதுடன் இருக்கவேண்டும் என நம்புகிறேன். இதுபற்றி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளேன். மியான்மர் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு தங்கள் வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். அவர்களை திருப்பி அனுப்பக்கூடாது. அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் நமது சகோதரர்கள், அவர்களுக்கு நமது அனுதாபம் உள்ளது.
மியான்மரில் இருந்து வருபவர்கள் நமது சகோதர, சகோதரிகள் என்ற எனது கருத்தை உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளேன். அவர்களுடன் குடும்ப இணைப்பு உள்ளது. மியான்மரில் இருந்து மிசோரம் வரும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கவேண்டும்’ என்றார்.