அரசு நில முறைகேடு வழக்கில் குமாரசாமிக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு சம்மன்

அரசு நில முறைகேடு வழக்கில் குமாரசாமி வருகிற 17-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-01 21:34 GMT
பெங்களூரு: அரசு நில முறைகேடு வழக்கில் குமாரசாமி வருகிற 17-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை அறிக்கை

பெங்களூரு கெங்கேரி அருகே பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் லே-அவுட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, அந்த நிலத்தில் 2.24 ஏக்கர் நிலம் அரசாணையில் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த நில விடுவிப்பில் முறைகேடு நடந்திருப்பதாகவும், குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாம்ராஜ்நகரை சேர்ந்த மகாதேவசாமி என்பவர் லோக்-அயுக்தா கோர்ட்டில் புகார் செய்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அரசு நிலம் விடுவிப்பில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதுகுறித்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மகாதேவசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, இந்த நில முறைகேடு வழக்கில் போலீசாரின் விசாரணை அறிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குமாரசாமி ஆஜராகவில்லை

மேலும் நில முறைகேடு மனு குறித்த விசாரணையை அந்த கோர்ட்டு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் குமாரசாமி 1-ந் தேதி (அதாவது நேற்று) ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நில முறைகேடு வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது குமாரசாமி ஆஜராகவில்லை. அவரது வக்கீல்கள், குமாரசாமி கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளதாகவும், அதனால் ஆஜராக முடியவில்லை என்றும் கூறி விளக்க அறிக்கை தாக்கல் செய்தனர். 

17-ந்தேதி ஆஜராக உத்தரவு

அதற்கு நீதிபதி, குமாரசாமி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார். இது சரியல்ல என்று கூறி அதிருப்தி தெரிவித்தார். வருகிற 17-ந் தேதி அன்று குமாரசாமி கட்டாயம் இந்த கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கூறி நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்