சார்மடி மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

சார்மடி மலைப்பாதையில் நடுரோட்டில் வந்து நின்ற ஒற்றை காட்டு யானை, வாகனங்களை வழிமறித்தது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-01 20:37 GMT
சாலையில் உலா வந்த காட்டுயானை.
சிக்கமகளூரு: சார்மடி மலைப்பாதையில் நடுரோட்டில் வந்து நின்ற ஒற்றை காட்டு யானை, வாகனங்களை வழிமறித்தது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நடுரோட்டில் காட்டு யானை

சிக்கமகளூரு மாவட்டத்தில் இருந்து தட்சிணகன்னடா மாவட்டத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக சார்மடி மலைப்பாதை உள்ளது. இதனால் இந்த பாதையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மலைப்பாதையில் 20-க்கும் அதிகமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் அடிக்கடி காட்டு யானைகள், காட்டெருமைகள் வெளியே வந்து சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. 

 இந்த நிலையில் சார்மடி மலைப்பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் ஒற்றை காட்டு யானை நடுரோட்டில் வந்து நின்று வாகனங்களை வழிமறித்தது. 

வாகன ஓட்டிகள் அவதி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனே வாகனங்களை இயக்காமல் ஓரமாக நிறுத்தினர். மேலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளையும் அணைத்தனர். ஆனால் அந்த யானை அங்கிருந்து செல்லாமல் சுமார் அரை மணி நேரம் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

சார்மடி மலைப்பாதையில் யானை சாலையில் சுற்றித்திரிந்த காட்சிகளை சிலர் செல்போனில் வீடியோவாக படம் பிடித்தனர். பின்னர் அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர். அது தற்போது வைரலாகி வருகிறது. 
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து  மெதுவாக நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பிறகே வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

கோரிக்கை

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சார்மடி மலைப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடுரோட்டில் வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. எனவே வனவிலங்குகள் சாலைக்கு வராமல் இருக்க இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்