பால்தாக்கரே நினைவகத்துக்கு முதல்-மந்திரி அடிக்கல் நாட்டினார் தேவேந்திர பட்னாவிஸ், ராஜ்தாக்கரேக்கு அழைப்பு இல்லை
பால்தாக்கரே நினைவகத்துக்கு முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே அடிக்கல் நாட்டினார். இதில் தேவேந்திர பட்னாவிஸ், ராஜ்தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மும்பை,
பால்தாக்கரே நினைவகத்துக்கு முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே அடிக்கல் நாட்டினார். இதில் தேவேந்திர பட்னாவிஸ், ராஜ்தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
நினைவிட அடிக்கல்
மத்திய மும்பை, தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்கா அருகே பழைய அதிகாரப்பூர்வ மேயர் பங்களாவில் மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேவுக்கு நினைவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.400 கோடி செலவில் அமைய உள்ள இந்த நினைவகத்துக்கு நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார், வருவாய் மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பாலாசாகேப் தோரட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முந்தைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவிக்காலத்தில் இந்த நினைவகம் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அவர் தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
அழைப்பு இல்லை
இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை மேற்கோள் காட்டி முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரும், உத்தவ் தாக்கரேயின் உறவினருமான ராஜ் தாக்கரே ஆகியோருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனை பா.ஜனதாவும், நவநிர்மாண் சேனாவும் கடுமையாக விமர்சித்து உள்ளன.
இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேகர் நேற்று கூறியதாவது:-
ஏன் அழைக்கவில்லை..
தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்தபோது பால் தாக்கரேவுக்கு நினைவகம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். பழைய மேயரின் பங்களா ஒரு பாரம்பரிய இடமாகும். இருப்பினும் அனைத்து அனுமதிகளையும் பெற போராடினார்.
ஆனால் நிகழ்ச்சிக்கு அவரை அழைக்காமல் சாதாரணமாக நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் சந்திப் தேஷ்பாண்டே கூறுகையில், “ பழைய மேயர் பங்களாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல அமைச்சர்களும் அவர்களது ஊழியர்களும் கலந்துகொள்ள முடியும் என்றால் ஏன் ராஜ் தாக்கரேவை அழைக்கக்கூடாது? ராஜ் தாக்கரே பல ஆண்டுகளாக சிவசேனாவில் பணியாற்றினார். அவர் அந்த கட்சிக்கு பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் அவரை குறிப்பிட்டு அழைக்காமல் தவிர்த்திருப்பது அரசியலில் ஆரோக்கியமான வழி இல்லை” என்றார்.