மேற்குவங்காளம்: பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
மேற்குவங்காளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதற்கிடையில், தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அம்மாநிலத்தில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. வெவ்வெறு கட்சி சேர்ந்தவர்களை குறிவைத்து மாற்றுகட்சியினர் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கட்சி தொண்டர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பங்கர் பகுதியில் காசிப்பூர் போலீசார் இன்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பங்கர் பகுதிக்கு உள்பட்ட வனப்பகுதியில் சுமார் 200 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது காட்டுப்பகுதியில் மறைத்துவைத்தது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.