இட ஒதுக்கீடு விவகாரம்: அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கல்விரீதியிலும், சமூகரீதியிலும் பின்தங்கிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதா என்ற விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-08 23:40 GMT

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மராட்டிய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, அரசமைப்புச் சட்டம் 102-வது பிரிவு திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது தொடர்பாக தற்போது அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அரசமைப்புச் சட்டம் 102-வது பிரிவு திருத்தப்பட்டபிறகு, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை இயற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் ஐகோர்ட்டில் வாதாடி உள்ளனர். அதேசமயம் அரசமைப்புச் சட்டத்தின் 14, 15-ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் பறிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்க, பதிலளிக்குமாறு அவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் அதை வலியுறுத்தினார்.

மனுதாரர் தரப்பு வாதம்

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர், அரசமைப்புச் சட்டம் 102-வது பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க அவற்றுக்கு உத்தரவிடக்கோரி தற்போதைய கோரிக்கையை முன்னரே எழுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என வாதிட்டதுடன், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு அவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

நீதிபதிகள் உத்தரவு

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அரசமைப்பு சட்டம் 102-வது பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க வேண்டியுள்ளது. எனவே இதுதொடர்பாக பதில் அளிக்க மாநில அரசு வக்கீல்களுக்கும், தலைமைச் செயலாளர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக செவ்வாய்க்கிழமைக்குள் நோட்டீஸ் அளிக்கப்படும்.

மார்ச் 15-ந்தேதி முதல் தொடர் விசாரணை நடைபெறும்.

அதில், சமூக மாற்றங்களை கருத்தில் கொண்டும், அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தைக் கருத்தில் கொண்டும், இந்திரா சகானி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து அல்லது தீர்ப்பை மறுஆய்வு செய்வது குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் மராத்தா சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, இந்திரா சகானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி உள்ளதா என்பது உள்ளிட்ட சட்ட பிரச்சினைகள் குறித்த வாதங்கள் கேட்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகள்