தங்க கடத்தல் வழக்கு: பதிலளிக்க வேண்டியது அமித்ஷாவின் கடமை; பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம் விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தங்க கடத்தல் வழக்கு பற்றி பதிலளிக்க வேண்டியது அமித்ஷாவின் கடமை என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Update: 2021-03-08 18:49 GMT
கண்ணூர்,

கேரளாவின் கண்ணூர் பகுதியில் தனது சொந்த ஊரில் இருந்து தனது சட்டசபை தேர்தல் பிரசாரத்தினை முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று தொடங்கினார்.  அவர் பேசும்பொழுது, அமித்ஷாவிடம் சில கேள்விகளை நான் கேட்க விரும்புகிறேன்.

தூதரகம் வழியே தங்க கடத்தலில் ஈடுபட திட்டமிட்டவர்களில் ஒருவராக சங்க பரிவாரை சேர்ந்த நபரும் இல்லையா?  இதுபற்றி அமித்ஷாவுக்கு தெரியாதா? என விஜயன் கேள்வி எழுப்பினார்.

திருவனந்தபுரம் விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின்னர், தங்க கடத்தலின் மையமாக திருவனந்தபுரம் விமான நிலையம் எப்படி வந்தது?  அமித்ஷா இதற்கு பதிலளிக்க வேண்டும்.  கேரள முதல் மந்திரி அல்ல.

இதற்கு பதிலளிக்கும் பொறுப்பு அமித்ஷாவுக்கு உள்ளது என கூறினார்.  தங்க கடத்தல் வழக்கை நேர்மையான வழியில் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறிய அவர், யாரையேனும் அச்சுறுத்தி விடலாம் என அவர்களது நினைப்பு இருக்குமென்றால், அது இங்கு வேலைக்கு ஆகாது என கூறினார்.

தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள ஸ்வப்னா சுரேஷ், வெளிநாட்டு பணம் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருக்காக கடத்தப்பட்டது என குறிப்பிட்டு உள்ளார் என்ற தகவலை கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்க துறை தெரிவித்து உள்ளது.

இதேபோன்று ஆளும் சி.பி.எம்.மின் முன்னாள் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மனைவி வினோதினி பாலகிருஷ்ணன் ஐபோன்களை லஞ்சமாக பெற்றுள்ள சமீபத்திய விவகாரத்தில் அவரிடம் சுங்க துறை விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது தங்கம், டாலர் கடத்தல் மற்றும் ஊழலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என இவை காட்டுகின்றன என்று மத்திய வெளிவிவகார இணை மந்திரி முரளீதரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்