ஜோதிராதித்ய சிந்தியா முதல்வராக வேண்டுமென்றால் காங்கிரசில் இருந்திருக்க வேண்டும்- ராகுல் காந்தி
ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் கடைசி பெஞ்ச் மாணவனாகவிட்டார். அவர் முதல்வராக வேண்டுமென்றால் காங்கிரஸில் இருந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.
புதுடெல்லி
மத்திய பிரதேசத்தில் தவிர்க்க முடியாத காங்கிரஸ் ஆளுமையாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், குவாலியர் அரச வம்சாவளியின் வழிவந்தவருமான மாதவராவ் சிந்தியாவின் மகன் ஆவார். காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராக இருந்த போது தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:-
ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் கடைசி பெஞ்ச் மாணவனாகத்தான் இருக்க முடியும். அவர் முதல்வராக வேண்டுமென்றால் காங்கிரசில் இருந்திருக்க வேண்டும். இப்போதும் சொல்கிறேன், பாஜகவில் இருக்கும்வரை சிந்தியாவால் முதல்வராக முடியாது.
அவர் முதல்வர் கனவை நனவாக்க நிச்சயமாக இங்கு திரும்புவார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து உழைத்தால் நிச்சயம் முதல்வர் பதவி ஒருநாள் தேடிவரும் என்று நான் அவரிடம் சொன்னேன்.
அவர்தான் அதைக் கேட்கவில்லை. வேறு பாதையை தேர்வு செய்துவிட்டார். இளைஞர் காங்கிரசார் யாருக்கும் அஞ்சாமல், ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்க்க வேண்டும்.
காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அக்கட்சியிலிருந்து விலகியதோடு பாஜகவிலும் இணைந்தார் எனபது குறிப்பிடதக்கது.