சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி நடைப்பயணம்

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பெண்களுடன் வரும் 7ம் தேதியன்று நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2021-03-05 00:36 GMT
கொல்கத்தா,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் அந்த மாநிலத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜி, கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 7ம் தேதியன்று நடைபயணம் மேற்கொள்கிறார். 

சிலிகுரியில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் இந்த நடைப்பயணத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா இது தொடர்பாக கூறியதாவது;-

“பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் சமையல் கியாஸ் விலை உயர்ந்துள்ளதால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் பேரணி பெண்களுடன் மட்டுமே நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்