அனுபம் ரசாயன் நிறுவனம் பங்கு வெளியிட செபி அனுமதி

அனுபம் ரசாயன் நிறுவனம் பங்கு வெளியிட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-03-03 01:12 GMT

மும்பை,

அனுபம் ரசாயன் நிறுவனம் பங்கு வெளியிட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு ரசாயனங்கள்

சூரத்தைச் சேர்ந்த அனுபம் ரசாயன் நிறுவனம் 1984-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் பாரம்பரிய ரசாயனப் பொருட்களை தயாரித்து வந்த இந்நிறுவனம் இப்போது சிறப்பு ரசாயனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் குஜராத்தில் 6 பல்நோக்கு உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இதன் ஆண்டு உற்பத்தித் திறன் 23 ஆயிரத்து 396 டன்னாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 6 ஆயிரத்து 726 டன் அளவிற்கு உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது. வேளாண் ரசாயனம், அழகு சாதனங்கள் மற்றும் மருந்து துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

அனுபம் ரசாயன் நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்தது. எனவே அதற்கு அனுமதி கேட்டு செபி அமைப்புக்கு விண்ணப்பித்தது. செபி இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த வெளியீட்டில் ₹760 கோடி மதிப்பிற்கான பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. நிறுவனத்தின் கடன்களை திரும்ப செலுத்துதல் மற்றும் சில பொது நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

வெளியீடு நிர்வாகம்

அனுபம் ரசாயன் பங்கு வெளியீட்டை ஆக்சிஸ் கேப்பிட்டல், ஆம்பிட் பிரைவேட், ஐ.ஐ.எப்.எல். செக்யூரிட்டீஸ், ஜே.எம். பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. வெளியீட்டுக்குப் பின் இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

மேலும் செய்திகள்