தடுப்பூசி போடும் முன் கேள்வி கேட்ட பிரதமர் மோடி: விழுந்து விழுந்து சிரித்த நர்சுகள்
பிரதமர் மோடி ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, அங்கிருந்த ஊழியர்களிடையே ஒருவித பதற்றம் உண்டானது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, அங்கிருந்த ஊழியர்களிடையே ஒருவித பதற்றம் உண்டானது. அதை தணிக்க விரும்பிய மோடி, அவர்களிடையே உரையாடினார். பெயர், ஊர் போன்ற விவரங்களை கேட்டார்.
புதுச்சேரியை சேர்ந்த நர்சு நிவேதா தடுப்பூசி போடவும், கேரளாவை சேர்ந்த நர்சு ரோசம்மா அனில் துணையாக இருக்கவும் ஏற்பாடாகி இருந்தது. அவர்களை இயல்புநிலைக்கு கொண்டுவர நினைத்த மோடி, அவர்களை பார்த்து, ‘‘கால்நடைக்கு போடும் ஊசியை பயன்படுத்த போகிறீர்களா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த நர்சுகள் ‘‘இல்லை’’ என்று பதில் அளித்தனர். இருந்தாலும், அவரது கேள்வியின் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை.
உடனே மோடி, ‘‘ஒன்றுமில்லை. அரசியல்வாதிகள், தடித்த தோல் கொண்டவர்கள் அல்லவா? அதனால், அவர்களுக்காக தடித்த, விசேஷ ஊசியை பயன்படுத்த போகிறீர்களா? என்று கேட்டேன்’’ என்று கூறினார்.
அதைக்கேட்ட 2 நர்சுகளும் விழுந்து விழுந்து சிரித்தனர். அங்கு சகஜநிலை உருவானது.
தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் அங்கிருந்த மோடி, கிளம்புவதற்கு முன்பு 2 நர்சுகளிடமும் ‘நன்றி’, ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு சென்றார்.