தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் ஏற்படவில்லை - மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன்
தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியதாவது:-
இந்தியாவில் போடப்படும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பனவை என நான் தொடக்கம் முதலே சொல்லிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வழிநடத்த வேண்டுமென பிரதமர் எங்களிடம் கூறுவார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியவுடன் முதல் நபராக பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதனால் நாங்கள் பிரமருக்கு நன்றி கூறுகிறோம்.
அவர் கோவேக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். விஞ்ஞான ரீதியாக கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட பின்பும், அதற்கு எதிராக தவறான தகவல்கள் பரவின, அதற்கான பதிலை பிரதமர் தற்போது அளித்துள்ளார் என நினைக்கிறேன்.
தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டபின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 0.0004 ஆகும். இது மிகக் குறைவான பாதிப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.