டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க முள் வேலி : இந்த தடுப்புகள் எங்களைத் தடுக்காது - விவசாயிகள் ஆவேசம்

நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைக்க நாங்கள் முன்னேறிச் செல்ல விரும்பினால், இந்த தடுப்புகள் எங்களைத் தடுக்காது. எங்கள் விஷயத்தில் அரசாங்கம் சதி செய்கிறது என விவசாயிகள் கூறினர்.

Update: 2021-02-02 15:33 GMT
புதுடெல்லி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

 இதுவரை மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில்  விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். ஆனால் இந்த பேரணி கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து, போராட்டம் வன்முறையாக மாறியதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் உள்ளனர். 

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தண்ணீர், மின்விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம், இணையசேவை முடக்கம் என நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக முள்வேலி அமைத்து டெல்லி எல்லைகளை மூடி வருகிறது.

காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. நடந்து வருவோரைத் தடுக்க சாலைகளில் ஆணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் எல்லைகளில் தற்காலிக தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணியிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது. 

சிங்கு எல்லையிலும் காவல்துறை தடுப்புகளை நிறுவியுள்ளது. டெல்லியில் இருந்து சிங்கு எல்லையை நோக்கிச் செல்லும் பாதையில், சிங்கு எல்லையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு அருகிலுள்ள சாலை முழுவதுமாகத் தோண்டப்பட்டுள்ளது.

 இது தவிர, இணைய தள சேவையும் தடை செய்யப்பட்டு உள்ளது.  இது குறித்து கிசான் சோஷியல் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த அனூப் சனவுத் கூறும் போது  "நாங்கள் ஒரு தொலைபேசி அழைப்பின் தூரத்தில் தான் இருக்கிறோம் என்று கூறும் அதே அரசு தான், எல்லைகளில் வைக்கப்படுவது போன்ற தடுப்புகளை இங்கு வைத்திருக்கிறது.

நாங்கள் அமைதியாக எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அமர்ந்திருக்கிறோம். இது தொடரும். ஆனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைக்க நாங்கள் முன்னேறிச் செல்ல விரும்பினால், இந்த தடுப்புகள் எங்களைத் தடுக்காது. எங்கள் விஷயத்தில் அரசாங்கம் சதி செய்கிறது.

விவசாயிகள் போராட்டக்களப்பகுதியில் பிப்ரவரி 2ஆம் தேதி நள்ளிரவுவரை இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான தகவல்களைக் கூட எங்களால் வழங்க முடியவில்லை. இப்போது விவசாயிகள் போராட்ட இயக்கத்தின் டு விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தில் எங்கள் குரல் அடக்கப்படுகிறது. இது ஒரு வழியில், ஜனநாயகப் படுகொலை. ஆனால், இந்த அழுத்தங்கள் அனைத்தையும் மீறி, நாங்கள் உறுதியாக நிற்போம், எங்கள் போராட்டம் தொடரும் என கூறினார்.

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் தலைவர் சத்நாம் சிங் பன்னு கூறும் போது "இணையச் சேவைக்கும் போக்குவரத்துக்கும் தடை விதிப்பதன் மூலம், விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவருவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது" என கூறினார் 

மேலும் செய்திகள்