கர்நாடகாவில் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை; ரூ.56.5 லட்சம் பணம், நகை பறிமுதல்
கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்பு துறை 30 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் நீர்ப்பாசன துறை அதிகாரியிடம் இருந்து ரூ.56.5 லட்சம், 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள் வருமானத்திற்கு மீறி அதிக அளவில் சொத்து குவிப்புகளில் ஈடுபட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன்படி அரசு ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்புடைய ஊழியர்களின் வீடுகளில் உள்ள பணம், தங்க மற்றும் வெள்ளி நகைகள், ஆவணங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
கர்நாடகா முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தார்வாத் பகுதியில் நீர்ப்பாசன துறையில் என்ஜீனீயர் ஒருவரின் வீட்டில் இருந்து 56.5 லட்சம் பணம், 400 கிராம் அளவுள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.