ராஷ்டிரபதி பவனை பார்வையிட 6-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி
ஜனாதிபதி மாளிகையை (ராஷ்டிரபதி பவன்) பொதுமக்கள் பார்வையிட பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மீண்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் ஜனாதிபதி மாளிகையை (ராஷ்டிரபதி பவன்) பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டன. அந்த வகையில் ஜனாதிபதி மாளிகையிலும் பொதுமக்களுக்கு தேதி குறிப்பிடாமல் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து பார்வையாளர்கள் பார்வையிட ஜனாதிபதி மாளிகை பிப்ரவரி 6ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாள்களில் அனுமதி உண்டு. பார்வையாளர் இணையதளத்தில் முன்பதிவு (நபர் ஒன்றுக்கு ரூ. 50 கட்டணம்) செய்து குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.