பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி; வாகன இயக்கம் பாதிப்பு
பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் கடும் பனிபடர்ந்து காணப்படுகிறது.
புதுடெல்லி,
நாட்டில் குளிர்காலம் நடந்து வரும் சூழலில் வடமாநிலங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் காலையில் வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக பதிவாகி வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர், நாட்டின் தலைநகர் டெல்லி, பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசத்தின் வடமேற்கு பகுதிகள், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் இமயமலை அடிவார பகுதிகள், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட பல பகுதிகளில் மித அளவிலான பனிப்பொழிவு பதிவாகி வருகிறது என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், பீகாரில் முசாபர்பூர் நகரில் அடர்பனி போர்வை போன்று மூடி காணப்படுகிறது. இதனால் தெளிவற்ற வானிலை நிலவுகிறது. பீகாரில் வெப்பநிலை காலையில் 9.91 டிகிரியாக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
இதனை முன்னிட்டு பொதுமக்கள் சாலைகளில் செல்லும்பொழுது, தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றனர். இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவை முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.