மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கங்குலி
கங்குலி கடந்த மாதம் 2-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த மாதம் 2-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் ஒரு அடைப்பு ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கங்குலிக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அடுத்த நாளில் அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த எஞ்சிய 2 அடைப்புகளும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ‘ஸ்டன்ட்’ பொருத்தப்பட்டது.
48 வயதான கங்குலி 4 நாள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து நேற்று காலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினார். கங்குலியின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘கங்குலி நன்றாக இருக்கிறார். வழக்கமான மனிதர்களை போல் அவரது இதயம் பலமாக இருக்கிறது.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர் இயல்பு பணிக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறோம். அடுத்த சில மாதங்களுக்கு தீவிரமான மருத்துவ கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்’ என்றார்.