மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் நேற்று முன்தினம் தொழில்துறை, சேவைத்துறை மற்றும் வர்த்தகத்துறை நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று அவர் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக 10-வது கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
நடப்பு நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்றால் சுகாதாரத்துறை பெரும் சவால்களை சந்தித்துள்ள நிலையில், வருகிற பட்ஜெட்டில் சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மாநாட்டில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு பட்ஜெட் தயாரிப்புக்கு தொழில் துறையின் வளர்ச்சியைத்தூண்டும் கருத்துகள், ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். இது இந்திய பொருளாதாரத்தை மீட்டு உலக பொருளாதார மீட்சிக்கும் உதவியாக இருக்கும்.
சுகாதாரத்துறையும் அந்த துறை சார்ந்த முதலீடுகளுமே அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும். அதன்படி சுகாதாரத்துறை கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புக்கு மட்டுமின்றி, டாக்டர்கள் போன்ற முன்கள பணியாளர்கள், தொழில்நுட்பங்கள், தொலை மருத்துவத்துக்கான திறன் மேம்பாடு உள்ளிட்ட அனைத்தும் பட்ஜெட்டில் கருத்தில் கொள்ளப்படும்.
சுகாதாரத்துறையில் இருந்து பெறப்பட்ட அனைத்து கருத்துகளும் பட்ஜெட் தயாரிப்பில் கருத்தில் கொள்ளப்படும். தடுப்பூசி தயாரிப்பது மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையில் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வசதியும், திறனையும் அதிர்ஷ்டவசமாக இந்தியா பெற்றிருக்கிறது.
மருத்துவ ஆய்வு மற்றும் மேம்பாடு, உயிரி தொழில்நுட்பம், மருந்து ஆய்வு மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் தனியார் பங்களிப்பு, சுகாதாரத்துறை மேலும் வளர்த்தெடுக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.