நாடு முழுவதும் வழக்கமான ரெயில் சேவை எப்போது தொடங்கும்? - ரெயில்வே வாரிய தலைவர் பதில்

நாடு முழுவதும் வழக்கமான ரெயில் சேவை தொடங்குவதற்கான உறுதியான தேதியை கூறுவதற்கு சாத்தியமில்லை என ரெயில்வே வாரிய தலைவர் கூறினார்.

Update: 2020-12-18 22:47 GMT
புதுடெல்லி, 

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் சரக்கு ரெயில் போக்குவரத்து எந்தவித பாதிப்பும் இன்றி நடந்து வருகிறது.

பின்னர் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே மாதத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் குறிப்பிட்ட தடங்களில் மட்டும் சிறப்பு ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் வழக்கமான பயணிகள் ரெயில்களின் சேவை இன்னும் தொடங்கவில்லை.

இந்த வழக்கமான ரெயில் போக்குவரத்து சீரடைவது எப்போது? என்ற கேள்வி பயணிகளின் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இது குறித்து ரெயில்வே வாரிய தலைவர் ஒய்.கே.யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் தற்போது 1,089 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொல்கத்தா மெட்ரோ ரெயில்களின் சேவை 60 சதவீதம் நடைபெற்று வருகிறது. மும்பையில் 88 சதவீத புறநகர் ரெயில் சேவையும், சென்னையில் 50 சதவீத புறநகர் ரெயில் சேவையும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு நடந்து வரும் ரெயில் போக்குவரத்துகளிலும் கொரோனா அச்சத்தால் 30 முதல் 40 சதவீத பயணிகளே சராசரியாக பயணிக்கின்றனர். கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை இன்னும் சீராகவில்லை.

இந்த சூழலில் வழக்கமான ரெயில் சேவை எப்போது தொடங்கும்? என்பது குறித்து உறுதியான தேதியை கூறுவதற்கு சாத்தியமில்லை. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் ரெயில்வே பொது மேலாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி வழக்கமான ரெயில் சேவை மெதுவாக, படிப்படியாக தொடங்கும். இது தொடர்பாக நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எப்போது, எங்கே தொடங்குவது என்பதற்கான சாத்தியக்கூறு உருவானதும் நாங்கள் ரெயில் சேவையை மீண்டும் கொண்டு வருவோம்.

இவ்வாறு ஒய்.கே.யாதவ் கூறினார்.

மேலும் செய்திகள்