வாகனங்களுக்கு எத்தனால் கலந்த பெட்ரோல் - பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பொதுமக்களிடம் கருத்துகளை கோரி வருகிறது.
புதுடெல்லி,
வாகனங்களில் பெட்ரோலை பயன்படுத்துவதால் செலவு அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து எரிபொருளாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு ஆலோசனை தெரிவித்து உள்ளது.
இந்த எரிபொருளுக்கு ‘இ20’ என்று பெயர். இதைப் பயன்படுத்துவதால் கார்பன் டையாக்சைடு, ஹைட்ரோ கார்பன் போன்ற நச்சு வாயுக்களின் உமிழ்வை குறைக்கமுடியும் என்றும், எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வரைவு அறிக்கையை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துகளை கோரி வருகிறது.