22 நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி போக்குவரத்து கடும் பாதிப்பு

22 நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு இருப்பதால் டெல்லி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பாதிப்பு

Update: 2020-12-17 07:28 GMT
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று  22-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 

சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில்  விவசாயிகள் முகாமிட்டிருப்பதால் டெல்லியில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. டெல்லி போக்குவரத்து காவல்துறையினரின் தகவல் படி சிங்கு, ஆச்சண்டி, பியாவ் மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. லம்பூர், சபியாபாத் மற்றும் சிங்கு  கட்டண வரி சாலைகள் வழியாக மாற்று வழித்தடங்களில் பயணிகள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் முகர்பா மற்றும் ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

அவுட்டர் ரிங் ரோடு, ஜி.டி.கே சாலை மற்றும் என்.எச் -44 ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரியானாவுக்கு செல்பவர்கள்  ஜரோடா (ஒரே வண்டிப்பாதை), தவுரலா, கபாஷெரா, பதுசராய், ராஜோக்ரி என்.எச் 8, பிஜ்வாசன் / பஜ்கேரா, பாலம் விஹார் மற்றும் துண்டஹேரா எல்லைகள் வழியாக  செல்லலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காசிப்பூர் எல்லையும் மூடப்பட்டுள்ளது. ஆனந்த் விஹார், டி.என்.டி, சில்லா, அப்சரா மற்றும் போப்ரா எல்லைகள் வழியாக மாற்று வழித்தடங்களில் பயணிகள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்