பெங்களூருவில் பெண் போலீஸ் அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை
பெங்களூருவில் பெண் போலீஸ் டி.எஸ்.பி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் டி.எஸ்.பி. ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு நகர சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்தவர் லட்சுமி. 33 வயதான இவர் கடந்த 2014ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று 2017 முதல் பெங்களூரு சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்றிரவு அவர் பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள நண்பர்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு உணவுக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற லட்சுமி, சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நண்பர்கள் கதவை உடைத்து பார்த்தபோது லட்சுமி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போலீஸ் அதிகாரி லட்சுமி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிக நேர்மையான அதிகாரியான லட்சுமியின் இந்த முடிவிற்கு பணி நெருக்கடி காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.