பிரதமர் மோடியிடம் ரூ.737 கோடி இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி: அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் ரூ.737 கோடி இழப்பீடு கோரிய மனுவை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2020-12-15 22:15 GMT
Photo Credit: PTI
வாஷிங்டன், 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு, கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி, அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு முன்பு, செப்டம்பர் 19-ந் தேதி, பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பு உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அதில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முப்படை துணை தலைமை தளபதி கன்வல்ஜீத் சிங் தில்லான் ஆகியோரிடம் இருந்து 10 கோடி டாலர் (ரூ.737 கோடி) இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில், மோடி உள்பட 3 பேருக்கான சம்மன், கடந்த பிப்ரவரி மாதம், டெக்சாஸில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்டு 2, அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையில் மனுதாரர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை நடத்த மனுதாரர்கள் முன்வரவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்ய மாவட்ட கோர்ட்டு நீதிபதி பிரான்சிஸ் ஸ்டேசி சிபாரிசு செய்தார். அதை ஏற்று, டெக்சாஸில் உள்ள மாவட்ட கோர்ட்டு நீதிபதி ஆன்ட்ரூ ஹனன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்