வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம்: விவசாயத் தலைவர்கள் திட்டவட்டம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம் என்று விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என கருதி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதில், சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் கடுமையாக சாடியதோடு, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில், டெல்லி சிங்கு எல்லையில் விவசாயத் தலைவர் ஜக்ஜீத் தல்லேவால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
"வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என அரசு தெரிவிக்கிறது. சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம் என நாங்கள் கூறுகிறோம். என்ன நடந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டத்தை போராட்டம் எட்டியுள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து ஓடவில்லை. ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உறுதியான திட்டத்துடன் முன்வர வேண்டும்."
மற்றொரு விவசாயத் தலைவர் தெரிவிக்கையில், "போராட்டத்தின்போது இதுவரை 2 இதற்கான விலையை மத்திய அரசு செலுத்தியே ஆக வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாட்டின் அனைத்து கிராமங்கள், தாசில்தார் தலைமையகங்களில் டிசம்பர் 20-ம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மரியாதை செலுத்தப்படும்" என்றார்.