பேச்சுவார்த்தை நடத்தினால் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்துதான் முதலில் பேச வேண்டும்; விவசாயிகள் உறுதி

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ள விவசாயிகள், ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்துதான் முதலில் பேச வேண்டும் என உறுதியுடன் தெரிவித்தனர்.

Update: 2020-12-12 23:20 GMT
Photo Credit: PTI
சண்டிகர், 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, திக்ரி, சில்லா, காஜிப்பூர் என டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் நேற்று 17-வது நாளை எட்டியது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில் சிலயோசனைகளை விவசாயிகளுக்கு அரசு அனுப்பியது. குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எழுத்துப்பூர்வ உறுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதிலேயே மிகவும் உறுதியாக இருக்கும் விவசாயிகள், இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக டெல்லிக்கு வரும் சாலைகளை அடைக்கப்போவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

எனவே விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் நிபந்தனைகளை விதித்து உள்ளனர். இது தொடர்பாக விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான கன்வல்பிரீத் சிங் பன்னு, நேற்று சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விரும்பினால், நாங்கள் தயார். ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது. அது குறித்துதான் முதலில் பேசவேண்டும். அதன்பிறகே எங்களின் பிற கோரிக்கைகள் குறித்து பேசுவோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் 14-ந்தேதி (நாளை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

எங்கள் போராட்டத்தில் இன்னும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க இருக்கின்றனர். ராஜஸ்தானின் ஷாஜகான்பூரில் இருந்து ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை வழியாக நாளை (இன்று) 11 மணிக்கு விவசாயிகள் வர இருக்கின்றனர். அதைப்போல நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வருகிற நாட்களில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.எங்கள் போராட்டத்தை பலவீனப்படுத்த அரசு முயன்றது, ஆனால் விவசாயிகள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அமைதியான வழியில் எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு கன்வல்பிரீத் சிங் பன்னு கூறினார்.
பாதுகாப்பு அதிகரிப்பு

இதற்கிடையே டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை போன்றவற்றை முடக்கப்போவதாக அறிவித்து உள்ளனர். இதனால் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சாலைகளில் காங்கிரீட் கட்டைகள், முள்வேலிகள் போன்றவற்றால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. விவசாயிகளின் போராட்டத்தால் ஏற்கனவே பல சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், திறந்திருக்கும் சாலைகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிடவும், சுங்கக்கட்டணம் இல்லா நாளை கடைப்பிடிக்கவும் விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி அரியானாவில் நேற்று பல்வேறு சுங்கச்சாவடிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

பாரதிய கிசான் யூனியன் தலைவர்கள் மல்கித் சிங் மற்றும் மனிஷ் சவுத்ரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அம்பாலா-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றில் மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள ஊழியர்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றன.

மேலும் தேசிய நெடுஞ்சாலை 44-ல் உள்ள பஸ்தாரா சுங்கச்சாவடி, கர்னால்-ஜிந்த் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியோண்ட் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகளையும் விவசாயிகள் ஆக்கிரமித்தனர். இதனால் சுங்கக்கட்டணம் இன்றி வாகனங்கள் சென்று வந்தன. இந்த போராட்டத்தையொட்டி சுங்கச்சாவடிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

விவசாயிகள் போராட்டம் வீரியமாக நடந்து வரும் பஞ்சாப்பில் கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதலே சுங்கச்சாவடிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு உள்ளதால், சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் பஞ்சாப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நாளொன்றுக்கு ரூ.3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதைப்போல உத்தரபிரதேசத்திலும் நேற்று சுங்கச்சாவடிகளில் மறியல் நடத்த விவசாயிகள் முயன்றனர். அலிகார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இதற்காக திரண்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற சமாஜ்வாடி தொண்டர்களையும் கைது செய்த போலீசார், கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரை வீட்டுக்காவலில் வைத்தனர்.

அரியானா மாநில பா.ஜனதா அரசின் துணை முதல்-மந்திரியும், ஜன்னாயக் ஜனதா கட்சி தலைவருமான துஷ்யந்த் சவுதாலா நேற்று டெல்லியில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஓரிரு நாட்களில் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அரியானா பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுமாறு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் அவரை வலியுறுத்தி வரும் நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அச்சுறுத்தல் வந்தால் பதவி விலகுவேன் என சவுதாலா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்