தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஒரு தடுப்பூசி மையத்தில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும்

மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.ஒரு தடுப்பூசி மையத்தில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-12-12 15:15 GMT
புதுடெல்லி

இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான  ஒப்புதல்கள் மிக விரைவில் கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக், ஜைடஸ் கேடிலா உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தடுப்பூசியை மருத்துவ அவசர பயன்பாட்டுக்குக் கொண்டு வர அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 112 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் பல்வேறு அம்சங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை அமைக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் ஒவ்வொரு மையத்திலும் ஒரு காவலர் உள்பட 5 தடுப்பூசி அதிகாரிகள் இருக்க வேண்டும். தடுப்பூசி மையத்தில் 3 அறைகள் இருக்க வேண்டும். ஓர் அறை மக்கள் காத்திருப்புக்காகவும், மற்றொரு அறை தடுப்பூசி வழங்குவதற்காகவும், 3-வது அறை தடுப்பூசி வழங்கப்பட்டவர்களை அரை மணி நேரம் வரை தங்கவைத்து கண்காணிக்கவும் அமைக்க வேண்டும். அங்கு அலர்ஜி உள்ளிட்ட சிறு உபாதைகளை சரிசெய்ய மருந்துகள் வைத்திருத்தல் அவசியம். பெரிய பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு மாற்ற ஆயத்தமாக இருத்தல் அவசியம்.

தடுப்பூசி மையங்களில் முகக்கவசம், 6 அடி சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். காத்திருப்பு அறை வாயிலில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசிகளை ஐஸ்பேக்குகளில் சரியான குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு பல்வேறு நெறிமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டியது அவசியமென்பதால், ஒரு தடுப்பூசி மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குவது சாத்தியம் என அரசு தெரிவிக்கிறது. ஒரு நபருக்கு தடுப்பூசி வழங்க குறைந்தபட்சம் 14 நிமிடங்களாவது ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முதலில் மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை என ஏற்கெனவே அரசு தெரிவித்துள்ளது. அதற்கடுத்தபடியாக பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள், மூன்றாவதாக 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் கொண்டவர்கள் என அரசு முன்னுரிமை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்