ஆந்திராவில் வினோத மர்ம நோய்:அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆந்திராவில் வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-12-12 15:00 GMT
படம்: PTI
கோதாவரி

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், எலூரில் மர்மநோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் திடீரென மயங்கி விழுகின்றனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் வலிப்பு நோயுடன், நுரை நுரையாக வாந்தி எடுக்கின்றனர். . இதனால் அந்த மாவட்டத்தில் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த மர்ம நோயால் நேற்றுமாலை வரை  600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் மாநில அரசு அனுப்பி வைத்த ரத்த மாதிரிகளில், ஈயம் மற்றும் நிக்கலின் தடயங்களைக் டெல்லி எய்ம்ஸ்  மற்றும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்துள்ளன. 

எலுரு நகரில் இருந்து நீர், இரத்தம், உணவு மாதிரிகளை  சேகரித்த ஐதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன  (என்ஐஎன்) வல்லுநர்கள் அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும் காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிறுவனம், இரத்தத்தில் உள்ள ஆர்கனோபாஸ்பரஸின் எச்சங்களையும் கண்டறிந்தது,

ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட சுற்றுப்புற காற்றின் தரம் மற்றும் நீர் குறித்த ஆய்வில், தண்ணீரில் ஹெவி மெட்டல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மர்ம நோயின் தன்மையைக் கண்டறிய 14 ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும் சரியான காரணத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை.

விஜயவாடாவிலிருந்து வடகிழக்கில் 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலுரு, கடலோர நெல் சாகுபடி மற்றும் மீன்வளர்ப்பு மையமாகும்.

மேலும் செய்திகள்