ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது தாக்குதல் திட்டமிட்ட நாடகம் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது தாக்குதல் திட்டமிட்ட நாடகம் என மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கொல்கத்தா,
பா.ஜனதாவை மேலும் பலப்படுத்துவதற்காக, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மேற்கு வங்காளத்துக்கு 2 நாள் பயணமாக அவர் சென்றார்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டயமண்ட் ஹார்பர் பகுதியில் அவர் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்காக ஜே.பி.நட்டா கொல்கத்தாவில் இருந்து கார் மூலம் அங்கு புறப்பட்டார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் பலரது கார்களும் சென்றன.
வழியில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்தை நெருங்கியதும், அவர்கள் ஜே.பி.நட்டாவின் கார் அணிவகுப்பு மீது சரமாரியாக கல்வீச்சில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் தலையிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அதையடுத்து, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் டயமண்ட் ஹார்பர் போய் சேர்ந்தனர்.
தாக்குதலில், பலரது வாகனங்கள் சேதமடைந்தன. பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் கார் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது. தாக்குதலில் அவர் காயமடைந்தார்.
பா.ஜனதா தேசிய இணை பொதுச்செயலாளர் சிவபிரகாஷ், செயலாளர் அனுபம் ஹஸ்ரா ஆகியோரின் வாகனங்கள் சேதமடைந்தன. அனுபம் ஹஸ்ராவும் காயமடைந்தார். நல்லவேளையாக, ஜே.பி.நட்டா காயமின்றி உயிர் தப்பினார்.
இதற்கிடையே, இந்த தாக்குதல் குறித்து மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். அதில், ஜே.பி.நட்டாவின் சுற்றுப்பயணத்தின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான குறைபாடுகள் காணப்பட்டதாகவும், போலீஸ் துறை அலட்சியமாக செயல்பட்டதாகவும் திலீப் கோஷ் கூறியிருந்தார்.
அதன்பேரில், பாதுகாப்பு குறைபாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக 14ம் தேதி விளக்கம் அளிக்கும்படி, மேவங்க மாநில தலைமை செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
நான் எதிர்க்கட்சியை மதிக்கிறேன், ஆனால் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நான் டெல்லிக்குச் செல்லும்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? நான் டெல்லிக்குச் சென்ற போதெல்லாம், பா.ஜனதா தொண்டர்கள் எனது வீட்டை முற்றுகையிட்டனர்.
பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது என பா.ஜனதாவினர் கூறுவது திட்ட மிட்ட நாடகம். அவர்கள் நடத்திய பேரணிக்கு கூட்டம் சேரவில்லை என்பதால் அதை திசைத்திருப்பவே நாடகமாடுகிறார்கள். நட்டாவின் கார் அணிவகுப்பில் உள்ள ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் ஆத்திரத்தில் கற்களை வீசியிருக்கலாம்.
நட்டாவின் பாதுகாப்பு வாகனம் எவ்வாறு தாக்கப்படக்கூடும். நட்டாவுக்குத்தான் மத்திய அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், பிஎஸ்எப் படைகள் பாதுகாப்புக்கு இருக்கின்றன. அனைத்து மத்திய படைகளையும் தனது வசம் வைத்திருக்கும் பா.ஜனதாவால், தனது கட்சித் தலைவரை மேற்குவங்க சுற்றுப்பயணத்தின்போது பாதுகாக்க முடியவில்லையா? இத்தனை பாதுகாப்பு இருந்தும் நட்டா மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த முடியுமா? ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தொடர்ந்து மாநில அரசைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.