டெல்லியில் கொட்டும் பனியில் 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 16-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 15-வது நாளை எட்டியது.
அரியானா, உத்தரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், இந்த சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைநகர் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இதனால் மாற்று சாலைகளை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் டெல்லிவாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் நடைபெற இருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை ரத்தானது. எனினும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு சில பரிந்துரைகளை விவசாய பிரதிநிதிகளுக்கு அனுப்பி உள்ளது.
ஆனால் இவற்றை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அறிவித்து உள்ளனர். அந்தவகையில் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் அடைக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆனால் அரசு தெரிவித்த யோசனைகளை விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 16-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர். டெல்லியில் திறந்த வெளியில் அவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.