மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அராஜகம் உச்சத்தில் உள்ளது: பாஜக ஆட்சி அமைவது உறுதி - ஜே.பி.நட்டா தாக்கு
மேற்கு வங்கத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதி என ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. குண்டு துளைக்காத கார் என்பதால் நட்டா காயமின்றி தப்பினார். இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங். கட்சிக்கும், பாஜக வுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இன்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் கல்வீசி தாக்கதல் நடத்தியது திரிணாமுல் காங். தொண்டர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீதான தாக்குதலுக்கு அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் அராஜகம் பெருகி விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி, இரு நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என கவர்னர் ஜெக்தீப் தங்காருக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காளி தேவி தான் என்னை காப்பாற்றினாள். மேற்கு வங்கத்தில் வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைவது உறுதி. மேற்கு வங்க மக்கள் அறிந்திருக்கிறார்கள், தேர்தல்களில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மம்தா ஜி மாநிலத்தில் செல்வாக்கை இழந்ததால் விரக்தியடைந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அராஜகம் உச்சத்தில் உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீட்கெட்டு உள்ளது மற்றும் நிர்வாகம் மோசமடைந்துள்ளது. இது எல்லாம் மம்தா ஜியின் அனுமதியுடன் நடந்துள்ளது. நாங்கள் அதை ஜனநாயக ரீதியாக மீட்க போராடுவோம் என்றார்.