புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுயசார்பு இந்தியாவுக்கான சாட்சி: பிரதமர் மோடி பேச்சு

புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுயசார்பு இந்தியாவுக்கான சாட்சியாக திகழும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2020-12-10 11:51 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் போதிய இடவசதி இல்லாத சூழலை முன்னிட்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது.  இதன்படி, தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கட்டுமான பணிக்கு தடை விதித்தது.  இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.

அதன்படி, டெல்லியில் புதிதாக அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று  அடிக்கல் நாட்டினார்.  இந்நிகழ்சியில் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர்.

ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் வருகிற 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஆண்டில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடி பேசும்பொழுது, இந்தியா தனது 75வது பிறந்த தினத்தை கொண்டாடும்போது நமது நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் வரும்.  இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

சுயசார்பு இந்தியாவுக்கான சாட்சியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் திகழும்.  தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பொதுமக்களுக்கு சிரமம் உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசவுகரியத்தை உணர்ந்தனர்.  புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்கள் தாராளமாக வந்து செல்லலாம்.

சென்னைக்கு அருகே உத்திரமேரூரில் வரலாற்று சான்று கிடைத்துள்ளது.  பஞ்சாயத்து நடந்ததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரில் கிடைத்துள்ளன.  மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும், உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அங்கு மகா சபை நடந்துள்ளது.  மக்கள் சபை நடந்தது பற்றி, கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்