ராணுவ தலைமை தளபதி நரவனே ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு பயணம்

ராணுவ தலைமை தளபதி நரவனே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2020-12-08 19:51 GMT
புதுடெல்லி, 

இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.

அவர் இன்றும், நாளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நரவனே, மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து, இந்தியா- அமீரகம் இடையிலான பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதிப்பார்.

பின்னர் நரவனே தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக வருகிற 13-ந் தேதி சவுதி அரேபியா செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கும் அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்துகிறார். அவற்றில், இந்தியா- சவுதி இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறார். பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களையும் பரிமாறிக்கொள்கிறார்.

சவுதி அரேபியாவில் அந்நாட்டு ராணுவ தலைமையகம், மன்னர் அப்துலஜீஸ் ராணுவ அகாடமி ஆகியவற்றுக்கு நரவனே செல்வார். தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் அவர், அங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு உரையாற்றுகிறார்.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்லும் முதல் இந்திய ராணுவ தலைமை தளபதி என்ற முறையில் நரவனேயின் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்