விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர: ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்த எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.

Update: 2020-12-08 14:04 GMT
படம்: PTI

புதுடெல்லி

3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

விவசாயிகளின் இந்த பாரத் பந்த்  வட மாநிலங்களில்  வெற்றிகரமாக நடந்தது.  இன்று காலை விவசாயிகள் அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கார் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது. 

எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பாரத் பந்த் அமைதியாக நடந்து முடிந்து உள்ளது.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மாலை சந்திக்கின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

 காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் ஆகியோர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை மாலை 5 மணிக்கு சந்திக்கிறது.
கொரோனா விதிமுறைகள் காரணமாக, ஐந்து பேருக்கு மட்டும் இந்தச் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்