காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் - குமாரசாமி பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தால், நான் இன்னும் முதல்-மந்திரி பதவியில் நீடித்து இருப்பேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
மைசூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி வகித்தார். ஆனால் குமாரசாமி மீதான அதிருப்தி காரணமாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டணி அரசு கவிழ்ந்தது.
தனது ஆட்சி கவிழ காங்கிரசார் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் இதற்கு காங்கிரசார் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் 2 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த நேற்று குமாரசாமி, மைசூருவுக்கு வருகை தந்தார். அவர் கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறை செய்து விட்டேன். காங்கிரசுடன் கூட்டணி வைத்ததற்கு பதிலாக, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் நான் இன்னும் முதல்-மந்திரி பதவியில் நீடித்து இருப்பேன். கூட்டணி அரசு கவிழ காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம்.
கிராம பஞ்சாயத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் இருக்காது. ஆனாலும் நமது கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் தர கூட்டம் நடத்தி உள்ளேன். கிராம பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மந்திரிகள் கிராமங்களை நோக்கி சென்று உள்ளனர். இப்போதாவது அவர்களுக்கு கிராமங்களுக்கு நினைவுக்கு வருகிறது என்பது மகிழ்ச்சி. எடியூரப்பா கூட பெலகாவிக்கு சென்று உள்ளார். அங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக எதுவும் பேசவில்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி யாருக்கும் நிரந்தரம் இல்லை. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது ஆர்.ஆர்.நகர், சிராவில் பா.ஜனதா வென்று உள்ளது. இடைத்தேர்தல் வேறு, பொதுத்தேர்தல் வேறு. இடைத்தேர்தல் வெற்றியே வைத்து மக்கள் நமது பக்கம் உள்ளனர் என்று அரசியல் தலைவர்கள் கனவு காண்கிறார்கள்.
மத்திய அரசு கர்நாடகத்தை கணக்கில் எடுத்து கொள்ளவே இல்லை. மாநிலத்தில் பா.ஜனதா முதல்-மந்திரி இருக்கிறார் என்பதை மத்திய அரசு மறந்து விட்டது. அரசு நியமித்து இருக்கும் நிகம மண்டலி மற்றும் வளர்ச்சி வாரியத்தில் ஒன்றும் இல்லை. தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற வாரியங்களை அமைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் முதல்-மந்திரி பதவியில் நீடித்து இருப்பேன் என்று குமாரசாமி கூறியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.