ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: சென்னையை தொடர்ந்து கொல்கத்தாவிலும் கட்டுப்பாடு
கொல்கத்தாவிலும் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
கொல்கத்தா,
தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி இறப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் சென்னையில் பெருநகர காவல்துறை அண்மையில் உத்தரவு ஒன்றை வெளியிட்டது.
அதில்,சென்னையில் உள்ள வாகன எரிபொருள் நிரப்பும் மையங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என பெரிய விளம்பரப் பலகை வைக்குமாறும், இந்த அறிவிப்புக்குப் பின்னரும் தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னையைப் போலவே கொல்கத்தாவிலும் ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என்று கொல்கத்தா மாநகர போலீஸ் அறிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் நபரும் ஹெல்மெட் அணிந்து இருந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று கொல்கத்தா மாநகர கமிஷனர் அறிவித்துள்ளார்.
வரும் 8 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் வாங்க முடியாதவர்கள் தங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் பெயர்களை பதிவு செய்தால் அவர்களுக்கு அரசு உதவி அளிக்கும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.