சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடக்காது, எழுத்துத் தேர்வாகத்தான் நடத்தப்படும் - அதிகாரி தகவல்
சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடக்காது, எழுத்துத் தேர்வாகத்தான் நடத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் கடந்த அக்டோபர் 15-ந்தேதி, பகுதியளவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பல மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வு எப்போது நடைபெறும், அது எழுத்துத்தேர்வாக நடத்தப்படுமா அல்லது ஆன்லைன் வழியாக நடைபெறுமா என்ற கேள்விகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மூத்த சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:-
‘சி.பி.எஸ்.இ. தேர்வு ஆன்லைன் வழியாக நடத்தப்படாது. எழுத்துத் தேர்வாகத்தான் நடத்தப்படும். ஆனால் சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்துதான் இறுதி முடிவு எடுக்கப்படும். தேர்வு நடைபெறும்போது, அது கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.
மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்குமுன் செய்முறைப்பயிற்சி தேர்வில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான மாற்றுவழிகள் குறித்து ஆராயப்படும்’ என்றார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் வருகிற 10-ந்தேதி விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.