நுண்ணறிவு மிக்க நபரை இழந்திருப்பது வருத்தமளிக்கிறது: அபய் பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்

அபய் பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-12-02 03:25 GMT
புதுடெல்லி,

குஜராத் மாநில பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர் அபய் பரத்வாஜ் (வயது 66). இவர் குஜராத் மாநில ராஜ்ய சபா எம்.பி. ஆக பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் ராஜ்கோட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். இருந்த போதிலும் அவரது நுரையீரல், கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் உயிர்காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் கடந்த அக்டோபர் 9-ந்தேதி அவருக்கு நிமோனியா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் உடல் உறுப்புகள் பல செயலிழந்து அவர் நேற்று மாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அபய் பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

குஜராத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி., ஸ்ரீ அபய் பரத்வாஜ் ஜி புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார், மேலும் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். 

நாட்டின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள, பிரகாசமான மற்றும் நுண்ணறிவு மிக்க நபரை நாம் இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்