பிரதமர் மோடி கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் 10 க்கும் குறைவான எம்.பி.க்களை கொண்ட கட்சிகள் பேச அனுமதி இல்லை

கொரோனா மற்றும் தடுப்பூசிகள் விநியோகம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் அனைத்து கட்சி கூட்டத்தில் 10 க்கும் குறைவான எம்.பி.க்களை கொண்ட கட்சிகள் பேச அனுமதிக்கப்படாது

Update: 2020-12-01 09:37 GMT
படம்: PTI
புதுடெல்லி

கொரோனா மற்றும் தடுப்பூசிகள் விநியோகம் என்ற தலைப்பில் டிசம்பர் 4 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள்  கலந்து கொள்ளும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நரேந்திர மோடி கூட்டி உள்ள இந்த அனைத்து கட்சி கூட்டத்தின் போது, ​​பாராளுமன்றத்தில் 10 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் மட்டுமே பேச அனுமதிக்கப்படும்; சிறிய கட்சிகள் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 10 எம்.பி. களுக்குள் இருக்கும் கட்சிகள் தங்கள் கருத்தை பதிவு செய்ய முடியாது.  பல பிராந்திய கட்சிகள் தங்கள் கருத்தை பதிவு செய்யும் வாய்ப்பை இழந்து உள்ளன.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிரோமணி அகாலிதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளான  சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ ஆகியவை இதில் அடங்கும்.

இதுகுறித்து சிபிஐ நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பினாய் விஸ்வம் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூட்டத்தில் 10 எம்.பி. க்கள் இல்லாத சிறிய கட்சிகளுக்கு இடமளிப்பது சாத்தியமில்லை எனில், இந்த விஷயத்தில் எனது கருத்துக்களை முன்வைக்க விரும்புவதாக கூறினார். 

சோதனை வசதிகளை அதிகரிக்கவும், நாடு முழுவதும் சோதனைகளுக்கான விலையை குறைக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா 2021 மே வரை நீட்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்