டெல்லியில் போராட்டம்: விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் - நிதிஷ்குமார் கருத்து

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-30 21:13 GMT
பாட்னா, 

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படும் என்று நினைத்து டெல்லியில் போராடும் விவசாயிகளின் அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அவர்கள் அவ்வாறு பேசும்போது, குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்த தங்களின் பயம் தேவையற்றது என்று விவசாயிகள் புரிந்துகொள்வர்.

பீகாரில் கடந்த 2006-ம் ஆண்டிலேயே மண்டி முறையை ஒழித்து, தொடக்க விவசாய கடன் சங்கங்கள் மூலம் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் முறையை கொண்டுவந்து விட்டோம்.

அதன்பிறகு பீகாரில் விவசாய கொள்முதல் அதிகரித்தே இருக்கிறது. குறைந்தபட்ச ஆதாரவிலை நீக்கப்படாது என்றும், கொள்முதல் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்றும் விவசாயிகளிடம் மத்திய அரசு விளக்கும் என நான் நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்