வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனியாகவோ கட்சி ஆரம்பிக்கலாம் - கபில் சிபல் மீது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சாடல்
கட்சி செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனியாகவோ கட்சி ஆரம்பிக்கலாம் என்று கபில் சிபலை, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சாடியுள்ளார்.
புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி தொடர்பாக கட்சியின் தலைமையை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் விமர்சித்து இருந்தார். இதற்கு அவருக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக கபில் சிபலை காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ கபில் சிபல் இதுபோன்ற கருத்தை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடுவதற்கு பதிலாக கட்சி கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம். பீகார் தேர்தலிலோ அல்லது கடந்த ஆண்டு நடந்த மற்ற மாநில தேர்தல்களிலோ கபில் சிபல் காங்கிரசுக்காக பிரசாரம் செய்யவில்லை. ஏ.சி. அறையில் இருந்து பேசுவதை தவிர்த்து விட்டு அவர் களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும்.
கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்தவர்கள், தங்களுக்கு காங்கிரசில் சரியான இடம் இல்லை என்று கருதினால் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு பதில் வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனியாக கட்சி ஆரம்பிக்கவோ சுதந்திரம் உள்ளது” என்று தெரிவித்தார்.