இந்தியாவில் 8 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை விட குறைவு
இந்தியாவில் கடந்த 8 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை விட குறைவாகவே நீடித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 93 சதவீதமாக உயர்ந்து விட்டது.
புதுடெல்லி,
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தற்போதும் கடுமையாக வாட்டி வருகிறது. ஐரோப்பாவில் சற்று ஓய்ந்திருந்த தொற்று அலை தற்போது மீண்டும் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது. அமெரிக்காவிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.எனினும் இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. புதிதாக பாதிக்கப்படுபவர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே நீடித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்றைய ஆய்விலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
88 லட்சத்தை கடந்தது
குறிப்பாக, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, நாடு முழுவதும் 41 ஆயிரத்து 100 பேர் மட்டுமே புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 88 லட்சத்து 14 ஆயிரத்து 579 ஆக அதிகரித்து உள்ளது.இந்தியாவில் கடந்த 8 நாட்களாக நாட்டின் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 7-ந் தேதிதான் கடைசியாக இந்தியா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதிப்பை பெற்றிருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து 50 ஆயிரத்துக்கு கீழான பாதிப்புகளை இந்தியா தினசரி பெற்று வருகிறது.
447 பேர் சாவு
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் நாட்டில் நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 447 என்ற குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தது. இதனால் இந்தியா கொண்டிருக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக ஏற்பட்ட மரணங்களில் அதிகபட்சமாக மராட்டியர்கள் 105 பேர் இறந்துள்ளனர். இது சுமார் 23.5 சதவீதம் ஆகும். மொத்த 447 மரணங்களில் 85.01 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்கள் அதிகம்
இதற்கிடையே நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 156 ஆகும். அந்த வகையில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களை விட, புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்றும் அதிகரித்து இருக்கிறது.
இவர்களையும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்து 5 ஆயிரத்து 728 ஆகி விட்டது. குறிப்பாக மொத்த பாதிப்பில் 93.09 சதவீதத்தினர் குணமடைந்து உள்ளனர். இது கொரோனாவுக்கு எதிரான போரில் உலக அளவில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
5.44 சதவீதத்தினருக்கு சிகிச்சை
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை வெறும் 4 லட்சத்து 79 ஆயிரத்து 216 ஆகும். இது மொத்த பாதிப்பில் வெறும் 5.44 சதவீதம் ஆகும். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சையால் இந்த எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது. புதிய பாதிப்புகள் குறைந்து வருவதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
விடுமுறை தினமான நேற்று முன்தினமும் 8 லட்சத்து 5 ஆயிரத்து 589 சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 கோடியே 48 லட்சத்து 36 ஆயிரத்து 819 ஆக உயர்ந்திருக்கிறது.
டெல்லியில் அதிகம்
நாடு முழுவதும் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில் 82.87 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் குறிப்பாக டெல்லியில் 7,340 பேரும், கேரளாவில் 6,357 பேரும், மராட்டியத்தில் 4,238 பேரும் ஒரே நாளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதைப்போல புதிதாக குணமடைந்தவர்களிலும் 79.91 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக 7,117 பேர் டெல்லியில் குணமடைந்து உள்ளனர். அடுத்ததாக கேரளாவில் 6,793 பேரும், மேற்கு வங்காளத்தில் 4,479 பேரும் ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு சாதித்து உள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.