அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் மருத்துவமனையில் அனுமதி
அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் சுவாச கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிம்லா,
அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இமாசல பிரதேசத்திற்கு வருகை தந்தபொழுது அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு சில மணிநேரம் சிகிச்சை முடித்து கொண்டு மருத்துவமனையில் இருந்து அவர் புறப்பட்டார். மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டனர் என அவர் புறப்படும்பொழுது கூறினார்.
நேற்றிரவு கட்டாரால் சரியாக தூங்க முடியவில்லை. வழக்கம்போல் மேற்கொள்ளும் பரிசோதனையை அவர் செய்து கொண்டார். அதன் முடிவுகள் அவர் நலமுடன் உள்ளார் என தெரிவித்தது. இதனால் அவரை சிகிச்சை முடித்து அனுப்பி வைத்துள்ளோம் என மருத்துவர் ரஜனீஷ் பதானியா கூறினார்.
அவருக்கு கொரோனா தொடர்புடைய எந்த பாதிப்பும் இன்று இல்லை. நலமுடன் உள்ளார் என அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்டில் கட்டாருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.